உள்ளூர் செய்திகள் (District)

கடல் நீர் வெளியேறியதால் பழவேற்காடு- காட்டுப்பள்ளி சாலை மணலால் மூடியது

Published On 2024-10-25 10:36 GMT   |   Update On 2024-10-25 10:36 GMT
  • மழைகாலங்களிலும் கடல் நீர் சாலை வரை வந்து விடும்.
  • ஜே.சி.பி.எந்திரம் மூலம் 2 முறை மணல் அகற்றப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது.

பொன்னேரி:

பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய 2-வது உவர்ப்பு நீர் ஏரி ஆகும். இப்பகுதியை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட மீனவகிராமங்கள் உள்ளன. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பழவேற்காடு பகுதியை சேர்ந்த எண்ணூர் காட்டுப்பள்ளி அதானி துறைமுகம், எல்.என்.டி. துறைமுகம், மற்றும் சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்பவர்கள் பழவேற்காடு- காட்டுப்பள்ளி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

தாங்கல்பெரும்புலம் ஊராட்சிக்குட்பட்ட கருங்காலி பகுதியில் உள்ள இந்த சாலை கடற்கரைக்கு மிக அருகில் உள்ளது.

இதனால் கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் போதும், மழைகாலங்களிலும் கடல் நீர் சாலை வரை வந்து விடும். இதனால் சாலை மணலால் மூடப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை முழுவதும் கடல் நீர் புகுந்து மணலால் மூடியதால் வாகன போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதானி துறைமுகம் சார்பில் ஜே.சி.பி.எந்திரம் மூலம் 2 முறை மணல் அகற்றப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பழவேற்காடு பகுதியில் கடல் அலை சீற்றமாக காணப்படுகிறது. இதனால் கருங்காலி பகுதியில் பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலை சுமார் 1/2 கி.மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் வடிந்து மணலாக நிரம்பி உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள். அவர்கள் மணல் உள்ள பகுதியில் இருசக்கர வாகனங்களை தள்ளிக்கொண்டு செல்கிறார்கள். பெரிய வாகனங்கள் வஞ்சிவாக்கம், காட்டூர், வாயலூர் வழியாக மாற்றுபாதையில் சுற்றி செல்கின்றன.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது கடல் அலை சீற்றத்தின் போது ஒவ்வொரு முறையும் சாலை மணலால் மூடப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். போக்குவரத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News