விதிமுறை மீறி இயக்கிய 42 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்
- ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள், பஸ்கள் இயக்கப்படுகிறது.
- பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சேலம்:
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள், பஸ்கள் இயக்கப்படுகிறது. நடப்பாண்டு கிறிஸ்துமஸ் விழா கடந்த 25-ந்தேதி கொண்டாடப்பட்டது.
மேலும் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர் விடுமுறையால் வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்தனர். இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டது. பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் சேலம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கடந்த 23-ந்தேதி முதல் நேற்று வரை சேலத்தில் தொப்பூர், பெரியார் பல்கலைக்கழகம் அருகில், மல்லூர், நத்தக்கரை, மேட்டுப்பட்டி, வைகுந்தம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆய்வு செய்தனர். கடந்த 23-ந்தேதி 60 ஆம்னி பஸ்களை ஆய்வு செய்தனர். அதில் 11 பஸ்களுக்கு ரூ.29 ஆயரமும், 24-ந்தேதி 9 பஸ்களுக்கு ரூ.20 ஆயிரமும் 25, 26-ந்தேதிகளில் 22 பஸ்களுக்கு ரூ.51,100 அபராதம் விதிக்கப்பட்டது.
மொத்தம் 4 நாட்கள் 182 ஆம்னி பஸ்களில் ஆய்வு செய்யப்பட்டதில் கூடுதல் கட்டணம், தகுதிச் சான்று, ஏர்ஹாரன், இன்சூரன்ஸ், பர்மிட் இல்லாதது உள்ளிட்ட விதிமுறை மீறிய 42 ஆம்னி பஸ்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.