உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் அபராதம்- கலெக்டர் எச்சரிக்கை

Published On 2023-03-07 10:02 GMT   |   Update On 2023-03-07 10:02 GMT
  • நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ரூ.1000மும், சிறு வணிக நிறுவனங்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அறிவிப்பு தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டு அதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி ஏறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள் நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் பினாஸ்டிக் கொடிகள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை தயாரிப்பதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும் மற்றும் உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன.

சென்னை ஐகோர்ட்டு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தெற்கு மண்டலம்) பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர் களுக்கு எதிராக அடிமட்ட அளவில் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ததை நிறைவேற்றும் வகையில் அதனை விற்பைனை செய்யும் வணிக நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

முதன்முறையாக வணிக நிறுவனங்களில் பயன்படுத்தினால் ரூ. 25 ஆயிரமும், துணிக்கடை களில் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரமும், மளிகை கடைகள், மருந்து கடைகள், நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ரூ.1000 மும், சிறு வணிக நிறுவனங்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும்.

எனவே தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினையும் மற்றும் அபராதத்தையும் தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News