ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கு தீர்வு காண வேண்டும் - ஏ.ஐ.டி.யூ.சி வலியுறுத்தல்
- போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தீர்வு காண வேண்டும்
- பணிக்கொடை, விடுப்பு தொகை உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலன்கள் இரண்டு வருட காலமாக நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யூ.சி. ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாக குழு கூட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது.
இதற்கு சங்கத் தலைவர் மல்லி ஜி.தியாகராஜன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் சந்திரமோகன் வரவேற்றுப் பேசினார். பொதுச்செயலாளர் அப்பாதுரை நடைபெற்ற பணியில் குறித்து பேசினார். போக்குவரத்து தொழிலாளர் ஓய்வு பெற்றோர் சம்மேளனத்தின் மாநிலத் துணைத் தலைவர் துரை.மதிவாணன் ஓய்வூதியர்களின் நீண்ட கால தீர்க்கப்படாத கோரிக்கை நிலை குறித்தும், தீர்வு காண வேண்டிய அவசியம் குறித்தும் பேசினார்.
இந்த கூட்டத்தில் ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு தொகையை 11ஆம் தேதி நடைபெறும் 14-வது போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையில் தீர்வு காண வேண்டும், கடந்த 2020 மே மாதம் முதல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை , விடுப்பு தொகை உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலன்கள் இரண்டு வருட காலமாக நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும், அரசு ஓய்வூதியர்களுக்கு நடைமுறை உள்ளது போன்ற மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், சங்க நிர்வாகிகள் சுந்தரபாண்டியன், மாணிக்கம், இருதயராஜ், சுப்பிரமணியன், ஞானசேகரன், நிர்வாக குழு உறுப்பினர்கள்கலியமூர்த்தி, குணசேகரன், தங்கராசு , ரெஜினால்டு ரவீந்திரன், கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.