ஈரோடு புறநகர் பகுதியில் வெளுத்து வாங்கிய மழை
- ஈரோடு மாநகர் பகுதியில் ஒரு சில நிமிடமே மழை பெய்தது.
- பெருந்துறை, எலந்த குட்டைமேடு, வரட்டுப் பள்ளம், மொடக்குறிச்சி, தாளவாடி போன்ற பகுதியில் மிதமான மழை பெய்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. கொளுத்தும் வெயிலால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகவும் அவதி அடைந்து வந்தனர்.
வரலாறு காணாத வெயிலால் மக்கள் புழுக்கத்தால் சொல்ல முடியாத துயரத்தில் இருந்து வந்தனர். மழை எப்போது பெய்யும், குளிர்ச்சியான சூழ்நிலை எப்போது வரும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. நேற்று மட்டும் 106.72 டிகிரி பதிவாகியிருந்தது.
இந்நிலையில் ஈரோடு புறநகர் பகுதியில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடிவேரி அணைப் பகுதியில் 53 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பலத்த மழை காரணமாக கோபி பஸ் நிலையம் அருகே ஒரு வேப்பமரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மேல் விழுந்தது. நல்ல வேலையாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதனால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தி மின் இணைப்பை சரி செய்தனர்.
இதேப்போல் கவுந்தபாடி, நம்பியூர், குண்டேரிப்பள்ளம், பவானி போன்ற பகுதிகளிலும் இரவு நேரத்தில் கனமழை பெய்தது. பவானியில் இரவில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. சித்தோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இரவில் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. பெருந்துறை, எலந்த குட்டைமேடு, வரட்டுப் பள்ளம், மொடக்குறிச்சி, தாளவாடி போன்ற பகுதியில் மிதமான மழை பெய்தது.
ஈரோடு புறநகர் பகுதியில் நேற்று இரவு பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆனால் அதே நேரம் ஈரோடு மாநகர் பகுதியில் ஒரு சில நிமிடமே மழை பெய்தது. இதனால் ஈரோடு மாநகர் பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கொடிவேரி-53, கவுந்தப்பாடி-39, நம்பியூர்-33, பவானி-29, குண்டேரிப்பள்ளம்-26, கோபி-12.20, பெருந்துறை-8. 20, எலந்த குட்டை மேடு-6.40, வரட்டுப்பள்ளம் அணை-4.40, மொடக்குறிச்சி-4, தாளவாடி-1.50.