கோத்தகிரி அருகே அடிப்படை வசதி கேட்கும் ஜீவா நகர் மக்கள்
- சாலை, குடிநீர் உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.
- ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆகியவற்றை திரும்ப ஒப்படைப்போம்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கூக்கல்தொரை ஊராட்சியில் உள்ளது ஜீவா நகர். இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் சாலை, குடிநீர் உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இந்த பகுதியானது வனத்தையொட்டி இருப்பதால் வனவிலங்குகள் நடமாட்டமும் உள்ளது. இரவு நேரங்களில் தெரு விளக்குகள் இல்லாதால், வனவிலங்குகள் வருவது தெரியாது. இதனால் சில சமயங்களில் வனவிலங்குகள் தாக்கும் சம்பவமும் நிகழ்கிறது.
தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு, பொதுமக்கள் ஊர் தலைவர் அய்யப்பன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர். ஆனால் மனு அளித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி கேட்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆகியவற்றை திரும்ப ஒப்படைக்க போவதாகவும், இது தொடர்பாக முதல்-அமைச்சரிடம் முறையிட உள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.