திண்டுக்கல் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
- சரியான நேரத்தில் பஸ்கள் சரியான நேரத்திற்கு இயங்காததால் மாணவ-மாணவிகள், கூலித்தொழிலாளர்கள் அவதியடைந்து வந்தனர்.
- முறைப்படி இயக்கப்படாத அரசு பஸ் இன்று காலை மொட்டைய கவுண்டன்ப ட்டிக்கு வந்தபோது சிறை ப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மொட்டைய கவுண்டன் பட்டியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ஆரம்பப் பள்ளி மட்டுமே உள்ளதால் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயில வேம்பார்பட்டி மற்றும் கோபால்பட்டிக்கு மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இங்கு கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிப்பதால் தினமும் வேலை நிமித்தமாக ஏராள மான தொழிலாளர்கள் திண்டுக்கல்லுக்கு வந்து செல்லும் சூழ்நிலை உள்ளது.
இந்த நிலையில் திண்டுக்கல்லில் இருந்து சாணார்பட்டி, கோபா ல்பட்டி வழியாக மொட்டைய கவுண்டன்பட்டி கிராமத்துக்கு காலை 6.30, 9.05, 11.30, 1.30, 3.30, 5.30 இரவு 9 மணி ஆகிய நேரங்களில் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் சரியான நேரத்திற்கு இயங்காததால் மாணவ-மாணவிகள், கூலித்தொழிலாளர்கள் அவதியடைந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் பஸ் வராததால் பள்ளிக்கு தினமும் தாமதமாக செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது. பொதுமக்களும் பாதிப்பு அடைந்தனர். மேலும் ஒரு சில நேரங்களில் தொடர்ச்சியாக அரசு பஸ்கள் இயக்கப்படாமலே இருந்தன.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.இதனால் ஆத்திர மடைந்த பொது மக்கள் முறைப்படி இயக்கப்படாத அரசு பஸ் இன்று காலை மொட்டைய கவுண்டன்ப ட்டிக்கு வந்தபோது சிறை ப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார், போக்குவரத்து அதிகாரி, வேம்பார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் சரியான நேரத்தில் தினமும் தொடர்ந்து அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். உங்களது கோரிக்கைகள் மேல் அதிகாரிகளிடம் பேசி தீர்த்து வைக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரி கூறியதின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.அரசு பஸ்சை ஒரு மணி நேரம் பொது மக்கள் சிறை பிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.