கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு முக கவசம் அணிந்து வந்த மக்கள்
- கோவை மாவட்டத்திலும் கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது.
- ஆஸ்பத்திரியில் ஆங்காங்கே முகக் கவசம் அணிய வேண்டும் என நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளது.
கோவை,
தமிழகத்தில் கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சல் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்து சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்திலும் கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதனால் காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்கு வருவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
மேலும் காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
இதனையடுத்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சிகிச்சைக்கு வருபவர்கள் உடன் வருபவர்கள் உள்நோயாளிகள், புறநோயாளிகள் டாக்டர்கள் என அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள் ளது.
மேலும் ஆஸ்பத்திரியில் ஆங்காங்கே முகக் கவசம் அணிய வேண்டும் என நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று காலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த டாக்டர்கள், நோயாளிகள் உள்பட அனைவருமே முக கவசம் அணிந்து வந்திருந்தனர். இருப்பினும் பலர் முக கவசம் அணியாமல் வந்திருந்தனர்.
ஆனால் அவர்களை காவலாளிகள் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தினர். முக கவசம் அணிந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் என தெரிவித்தனர்.
இதையடுத்து பலரும் அருகே இருந்த கடைகளுக்கு சென்று முக கவசங்களை வாங்கி அணிந்து கொண்டு ஆஸ்பத்திரிக்குள் சென்றனர்.
தொடர்ந்து யாராவது முககவசம் அணியாமல் ஆஸ்பத்திரிக்குள் சுற்றுகிறார்கள் என்பதையும் கண்காணித்து வருகின்றனர்.