உள்ளூர் செய்திகள் (District)

பெரம்பலூர்-அரியலூர் பகுதிகளில் விதிகளை மீறி செயல்பட்ட 21 நிறுவனங்களுக்கு அபராதம்

Published On 2022-12-30 09:26 GMT   |   Update On 2022-12-30 09:26 GMT
  • விதிகளை மீறி செயல்பட்ட 21 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
  • வெளிநாடுகளில் இருந்த இறக்குமதி செய்யப்படும் பொட்டலப்பொருட்களில் உரிய விபரங்கள் இல்லாமல் விற்பனை செய்பவர்கள் மீதும் சட்ட விதகளின்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகள், எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோகம் செய்யும் கிடங்குகள், பேக்கரி, பால் மற்றும் பால் பொருட்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட், லைட்டர் ஆகியவற்றை விற்பனை செய்யும் நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் மூர்த்தி தலைமையில் எடையளவு ஆய்வாளர்கள் திவாகரன், சாந்தி, தேவேந்திரன், சம்பத் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டர். இந்த ஆய்வானது 59 நிறுவனங்களில் நடைபெற்றது. இதில் 21 நிறுவனங்கள் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் சட்டமுறை எடையளவுகள் விதிகளுக்கு முரண்பாடாக பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த 21 நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மேற்படி நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூர்த்தி கூறியதாவது:- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் மூலம் உரிய உரிமம் பெறாமல் பொருட்களை பொட்டலமிட்டு விற்பனை செய்பவர்கள் மீதும், மின்னணு தராசுகள் உட்பட அனைத்து விதமான எடை அளவைகள் உரிய காலத்தில் மறு முத்திரையிடாமல் பயன்படுத்துபவர்கள் மீதும், அதிகபட்ச சில்லறை விற்பனைக்கு கூடுதலாக விற்பனை செய்பவர்கள் மீதும், எடைக்குறைவாக விற்பனை செய்பவர்கள் மீதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்த இறக்குமதி செய்யப்படும் பொட்டலப்பொருட்களில் உரிய விபரங்கள் இல்லாமல் விற்பனை செய்பவர்கள் மீதும் சட்ட விதகளின்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று விற்பனை நிறுவன உரிமையாளர்களிடம் எச்சரிக்கை விடுத்தார்.


Tags:    

Similar News