உள்ளூர் செய்திகள் (District)

பத்திர பதிவாளர், சார் பதிவாளருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்

Published On 2022-12-02 09:24 GMT   |   Update On 2022-12-02 09:24 GMT
  • பத்திர பதிவாளர், சார் பதிவாளருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
  • பெரம்பலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு

பெரம்பலூர்:

பெரம்பலூர் கடைவீதியை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி தனலட்சுமி. இவர் பெரம்பலூர் தெற்கு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டினை கிரையம் பெற்று அதனை பதிவு செய்வதற்காக கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம்தேதி பெரம்பலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உரிய பத்திரம் மற்றும் பதிவு கட்டணம் செலுத்தினார்.

ஆவணங்கள் மற்றும் பதிவு கட்டணம் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு பதிவு செய்யவில்லை. ஏன் என கேட்டதற்கு அந்த வீட்டை விற்பனை செய்ய மணிவண்ணன் என்பவர் தடை மனு அளித்துள்ளார். ஆகையால் பதிவு செய்ய இயலாது என சார்பதிவாளர் கூறியுள்ளார்.

தான் வாங்கிய சொத்திற்கு சரியான மார்க்கெட் மதிப்பினை செய்து முத்திரை கட்டணம் செலுத்தியும் பத்திரபதிவு செய்யாமல் நிலுவையில் வைத்துவிட்டு அலைகழித்ததால் தன்னுடைய பத்திரம் மற்றும் ஆவணங்களை திரும்பி தருமாறு சார்பதிவாளரிடம் தனலட்சுமி கேட்டுள்ளார். பலமுறை எழுத்து பூர்வமாக கேட்டும் ஆவணங்களை சார்பதிவாளர் திருப்பி தரவில்லை.

இதனால் கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 22ம்தேதி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் ஜவஹர், உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர் நேற்று அளித்த தீர்ப்பில் சேவை குறைபாடு புரிந்து சார்பதிவாளர் மற்றும் பதிவாளர் ஆகியோர் பாதிக்கப்பட்ட தனலட்சுமிக்கு ரூ. 50 ஆயிரம் நஷ்ட ஈடும், வழக்கு செலவிற்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.60 ஆயிரம் வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News