உள்ளூர் செய்திகள்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு

Published On 2023-01-25 09:14 GMT   |   Update On 2023-01-25 09:14 GMT
  • மதுரை அலங்காநல்லூரில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டு, திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன.
  • இதையொட்டி, சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு விழா சங்கத் தலைவர் மணிகண்டன் தலைமையில், திரளான இளைஞர்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து உள்ளனர்.

நாமக்கல்:

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை அலங்காநல்லூரில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டு, திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குமாரபாளையம், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம் மற்றும் சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். இதையொட்டி, சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு விழா சங்கத் தலைவர் மணிகண்டன் தலைமையில், திரளான இளைஞர்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து உள்ளனர்.

அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் ஜல்லிக்கட்டு விழா சங்கம் செயல்படுகிறது. இச்சங்கம் சார்பில், தமிழக அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக நடத்தவில்லை. இந்த ஆண்டு, ஜல்லிக்கட்டு விழா சங்கம் சார்பில், மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வருகிற மார்ச் 3-ந் தேதி, சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும். இந்த விழாவில், தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி, ஜல்லிக்கட்டு விழா நடத்த திட்டமிட்டு உள்ளோம். எனவே எங்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News