கைதான டாக்டர் உள்பட 5 பேரை காவலில் எடுக்க மனு- போலீசார் நடவடிக்கை
- மாத வாடகை 15 லட்ச ரூபாய், ஆண்டுதோறும் 10 சதவீத வாடகை உயர்வு என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
- ராமச்சந்திரன் உள்பட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இன்று கோவை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுதாக்கல் செய்து உள்ளனர்.
கோவை,
கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தலைவர் ராமச்சந்திரன் (வயது72).
இவரிடம் கடந்த 3 ஆண்டிற்கு முன்பு சென்னையை சேர்ந்த உமா சங்கர்(54) என்பவர் தான் தனது நிறுவன பெயரில் மருத்துவமனை நடத்த விருப்பம் தெரிவித்தார். வயதான காரணத்தினாலும், தொட ர்ந்து மருத்துவமனையை கவனிக்க இயலாததாலும் இதற்கு ராமச்சந்திரன் ஒப்பு கொண்டார்.
மருத்துவமனை கட்டிடத்தை வாடகை அடிப்படையில் உமாசங்கரிடம் ஒப்படைத்து விட்டதாக தெரிகிறது. மாத வாடகை 15 லட்ச ரூபாய், ஆண்டுதோறும் 10 சதவீத வாடகை உயர்வு என ஒப்பந்தம் மேற்கொள்ளப்ப ட்டதாகவும் கூறப்படுகிறது. உமாசங்கர் பேசியபடி வாடகை தரவில்லை என தெரிகிறது.
4.95 கோடி ரூபாய் வாடகை பாக்கி தொடர்பாக இரு தரப்பினருக்கும் பிரச்சினை நிலவியது. இந்நிலையில் ராமச்சந்திரன் 100 கோடி ரூபாய் மதிப்பிலான தனது மருத்துவமனையை அபகரிக்க உமாசங்கர் முயற்சிப்பதாக, கொலை மிரட்டல் விடுத்ததாக மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் ஒரு கும்பல் புகுந்து அங்கியிருந்தவர்களை தாக்கியதாக தெரிகிறது.
இது தொடர்பான வீடியோ பதிவும் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக உமாசங்கர், அவரது மேலாளர் மருதவாணன் ஆகியோர் மீது ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற உமாசங்கர் கண்ணப்ப நகர் பகுதியில் நடந்து சென்ற போது கார் மோதி பலியானார்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டில் மருத்துவமனையில் நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் மருத்துவமனை தலைவர் ராமச்சந்திரன் நேற்று கைது செய்யப்பட்டார். மேலும் இவருடன் உதவியாளர் காமராஜ் (45), மூர்த்தி (45), முருகேசன் (47), டிரைவர் பழனிசாமி ஆகிய 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் உள்பட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இன்று கோவை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுதாக்கல் செய்து உள்ளனர். விசாரணைக்கு பிறகு எத்தனை நாட்கள் காவல் கொடுக்கப்படும் என்பது தெரியவரும்.
இவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் பட்சத்தில் இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் டாக்டர் உமாசங்கர் விபத்தில்தான் மரணம் அடைந்தாரா? அல்லது மர்மம் உள்ளதா? என்பன போன்ற கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என தெரிகிறது.