நாகை மாவட்டத்தில் குழாய் வழி எரிவாயு இணைப்பு திட்டம்
- இந்தியாவின் பெருநகரங்களில் செயல்பாட்டில் உள்ள வீட்டிற்கு வீடு குழாய் வழி எரிவாயு இணைப்பு திட்டம் நாகை மாவட்டத்தில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
- நாகை மாவட்டம் முழுவதும் வீட்டிற்கு வீடு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் பணிகள் விரைந்து தொடங்கப்படும்.
நாகப்பட்டினம்:
உலக நாடுகள் மட்டு மில்லாமல், மும்பை, டில்லி உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில் செயல்பாட்டில் உள்ள வீட்டிற்கு வீடு குழாய் வழி எரிவாயு இணைப்பு திட்டம் நாகை மாவட்டத்தில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. திருமருகலை அடுத்த சீயாத்தமங்கை கிராமத்தில், தமிழகத்திலேயே முதல் முதலாக 14 வீடுகளில் குழாய் வழி எரிவாயு இணைப்பு திட்டத்தை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
டோரண்ட் கேஸ் நிறுவனம் சார்பாக தொடங்கப்பட்டுள்ள குழாய் வழி எரிவாயு இணைப்பு திட்டத்தில் இதுவரை 65 இல்லத்தரசிகள் பதிவு செய்துள்ளனர். நாகை மாவட்டம் முழுவதும் வீட்டிற்கு வீடு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் பணிகள் விரைந்து தொடங்கப்படும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
சீயாத்தமங்கை கிராமத்தில் மிகுந்த பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு சேமிப்பு நிலையத்தில் இருந்து, 17 கிலோ தூரம் பூமி வழியாக 1 முதல் ஒன்றரை அடி ஆழத்தில் குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு வழங்கப்படுகிறது. வீட்டிற்கு வீடு மின்சாரம் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைப்பது போல எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டு, சமையலறைக்கு நேரடியாக எரிவாயு கொடுக்கப்பட்டுள்ளது.
எல்.பி.ஜி. சிலிண்டரை விட பாதுகாப்பானதாக இருக்கும். கேஸ் தீரும் அச்சம், புக் செய்ய வேண்டியதில்லை, 24 மணி நேரமும் தடையில்லா கேஸ் விநியோகம் என பல அம்சங்களை கொண்ட திட்டத்தில், செலவீனமும் சிக்கனமாகும். குழாய் மூலம் வழங்கப்படும் எரிவாயுவில், 1 கொள்ளளவு ரூ.45 வீதம் ரூ.805 மட்டுமே செலவாகும். மின்சார கட்டணம் போல இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இணைய வழியிலேயே எரிவாயு கட்டணம் செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் நுகர்வோர் அலைய வேண்டிய அவசியமில்லை.
கெயில் நிறுவனத்தில் இருந்து, இறக்குமதி செய்யப்படும், சமையல் எரிவாயுவானது குழாய்கள் மூலம் பாதுகாப்பான முறையில் வீட்டிற்கு வீடு கொண்டு வருவதை கண்காணிக்க 24 மணிநேரமும் தொழில்நுட்ப கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டுள்ளது. நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் 1 லட்சத்து, 60 ஆயிரம் இணைப்புகள் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று டோரண்ட் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.