கடையம் அருகே இன்று காலை பரிதாபம்-ஒடும் ரெயிலில் ஏற முயன்ற தொழிலாளி தவறி விழுந்து பலி
- ராஜீவ்காந்தி நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- வாகன நிறுத்தம் பகுதியில் ராஜீவ்காந்தி மோட்டார் சைக்கிளை விடுவதற்குள் ரெயில் புறப்பட்டுள்ளது.
கடையம்:
கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சியை அடுத்த அழகப்பபுரத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி(வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தை உள்ளனர்.
ராஜீவ் காந்தி நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர் தினமும் மோட்டார் சைக்கிளில் ஆழ்வார்குறிச்சி ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து செங்கோட்டை-நெல்லை பயணிகள் ரெயிலில் ஏறி நெல்லைக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் அவர் புறப்பட்டுள்ளார். அவர் ரெயில்வே வாகன நிறுத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிளை விடுவதற்குள் ரெயில் புறப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து ரெயில்வே நடைமேடைக்கு வேகமாக ஓடி உள்ளார். அங்கு ரெயிலில் ஏறுவதற்கு முயன்றபோது தடுமாறி கீழே விழுந்த அவரது தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாா.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், தென்காசி ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.