உள்ளூர் செய்திகள்

உக்கடம் மேம்பால இறங்கு தளம் பகுதியில் பூங்கா அமைக்க திட்டம்

Published On 2022-08-21 10:07 GMT   |   Update On 2022-08-21 10:07 GMT
  • கடந்த 2 நாட்களாக மின்சார கேபிளில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
  • முதல் கட்ட மேம்பால பணிகள் 80 சதவீதம் வரை முடிந்து விட்டது.

கோவை:

கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை 2.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.430 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது.

இந்த மேம்பாலம் உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே தொடங்கி கரும்புகடை வரை முதல் கட்டமாகவும், கரும்புகடை அருகே தொடங்கி ஆத்துப்பாலம் வரை 2-வது கட்டமாகவும் நடக்கிறது. இதில் முதல் கட்ட மேம்பால பணிகள் 80 சதவீதம் வரை முடிந்து விட்டது.

இந்த மேம்பாலத்தின் குறுக்கே உயரழுத்த மின்சாரம் செல்கிறது. இதனை புதைவட மின்சார கேபிள் மூலம் உக்கடம் துணை மின் நிலையத்திற்கு கொண்டு செல்ல ரூ.9 கோடியில் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த பணிகள் முடிந்ததை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக இந்த மின்சார கேபிளில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் மின்கசிவு எதுவும் இல்லை என்பது தெரியவந்ததை தொடர்ந்து நேற்று மின் இணைப்பு வழங்கும் பணி நிறைவு பெற்றது. இதற்காக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:-

உக்கடம் பெரிய குளத்தில் இருந்து உக்கடம் துணை மின் நிலையம் வரை 600 மீட்டர் தூரத்திற்கு புதை வட மின்சார கேபிள் அமைக்கும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது.

இதனைத்தொடர்ந்து துணை மின்நிலையம் முதல் மேம்பாலம் வரை உள்ள மின் கோபுரங்கள் படிப்படியாக அகற்றப்படும்.

தொடர்ந்து உக்கடம் மேம்பாலம் முதல்கட்ட மேம்பால பணி இன்னும் சில மாதங்களில் முழுமையாக முடிக்கப்படும்.

இதுதவிர லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே வட்ட வடிவில் அமையும் இறங்கு தளம் பகுதியில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News