உள்ளூர் செய்திகள்

கோடை மழையைப் பயன்படுத்தி உழவு மேற்கொள்ளலாம்- வேளாண்மைத் துறை அதிகாரிகள் தகவல்

Published On 2023-05-14 09:10 GMT   |   Update On 2023-05-14 09:10 GMT
  • கடந்த 2 மாதங்களில் 110 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது.
  • ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மையில் கோடை உழவு முக்கிய தொழில்நுட்பமாகும்.

கோவை,

கோவையில் தற்போது பெய்து வரும் மழையைப் பயன்படுத்தி கோடை உழவு மேற்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கா.முத்துலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் 110 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக நிலங்கள் ஈரத்தன்மையுடன் காணப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்ளலாம்.

கோடை உழவு மேற்கொள்ளப்படும் போது மண்ணில் புதையுண்டு கிடக்கும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் வெளியே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுகின்றன.

தீமை செய்யும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்களும், முட்டைகளும் அழிக்கப்படுவதால் அடுத்து சாகுபடி செய்யப்படும் பயிர்களில் நோய், பூச்சி தாக்குதல் குறைந்து பயிர்களின் வளர்ச்சியும், மகசூலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மையில் கோடை உழவு முக்கிய தொழில்நுட்பமாகும். அதேபோல, உழவின் போது களைச்செடிகளும், அதன் விதைகளும் அழிக்கப்படுவதால் பயிர் சாகுபடியின் போது களைகள் பிரச்சனையும் குறைகிறது. கோடை உழவின் மூலம் கிடைக்கும் மழைநீரை வீணாக்காமல் நிலத்துக்குள் சேகரிக்க முடியும். இது மண்ணின் தன்மையை அதிகரித்து காற்றோட்டத்தை ஏற்படுத்தி, நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.

கோடை உழவை சரிவுக்கு குறுக்கே உழவு செய்ய வேண்டும். இதனால், மண் அரிமானம் கட்டுப்படுத்தப்படுகிறது. கோடை உழவு செய்யாத வயல்களில் நீர் வேகமாக வழிந்ேதாடி மண் அரிமானம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, கோடை உழவு செய்வது விவசாயிகளுக்கு பல்வேறு வழிகளில் பயன்களைத் தருகிறது.

கோடை உழவின் போது ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு உழவு செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு மேலும் பல நன்மைகள் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News