உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் பொதுமக்கள் அளித்த 162 மனுக்கள் மீது போலீசார் நடவடிக்கை

Published On 2023-04-13 09:16 GMT   |   Update On 2023-04-13 09:16 GMT
  • கோவையில் வாரந்தோறும் போலீசார் சார்பில் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும்.
  • கமிஷனர் பாலகிருஷ்ணன் பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று விசாரணை செய்தார்.

கோவை,

கோவை மாநகர காவல் நிலையங்களில் குறைதீர் முகாம் நடந்தது.

வாரந்தோறும் புதன் கிழமைகளில் கோவை அனைத்து காவல் நிலையங்களிலும் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு அவற்றின் மீது சட்டத்துக்கு உள்பட்டு விசாரணை நடத்தி முறையாக தீர்வுகள் எட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை மாநகரில் உள்ள அனைத்து சட்டம்-ஒழுங்கு, புலனாய்வுப் பிரிவு காவல் நிலையங்கள், மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் தனிப்பிரிவுகளில் பொது மக்களின் மனுக்கள் மீதான குறைதீர் முகாம் நேற்று நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 162 மனுக்களில் சம்மந்தப்பட்ட மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் ஆகிய இருதரப்பினரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பாக கோவை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

இந்த விசாரணையின் போது 64 புகார்களில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகிய இருதரப்பினரும் சமாதானமாகி விட்டனர். 44 மனுக்கள் முறையாக விசாரிக்கப்பட்டு குறைகளுக்கு ஏற்ப இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டவாறு தீர்வு காணப்பட்டது. 6 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 மனுக்கள் மீது ஆவணங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக விசாரணை நிலுவையில் உள்ளது. 33 மனுக்களில் சம்மந்தப்பட்ட இருதரப்பினரும் நீதிமன்றம் சென்று தீர்வு கண்டு கொள்வதாக தெரிவித்ததையடுத்து அவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் பாலகிருஷ்ணன் பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று விசாரணை செய்தார்.

Tags:    

Similar News