தாம்பரம் அருகே வெடிகுண்டு தயாரித்த கூலிப்படையினரை துப்பாக்கி முனையில் பிடித்த போலீசார்
- தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், மணிமங்கலம் போலீசார், கரசங்கால் வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- சென்னையை சேர்ந்த பெரிய கும்பல்கள், அந்த கூலிப்படையினருக்கு பணம் கொடுத்து கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட வைத்துள்ளனர்.
சென்னை:
சென்னை தாம்பரம் அருகே கரசங்கால் வனப்பகுதியில் சிலர் சந்தேகத்துக்கிடமான வகையில் திரிந்தனர். அவர்களின் நடவடிக்கையில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், மணிமங்கலம் போலீசார், கரசங்கால் வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கும்பல் அங்கு சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் துப்பாக்கி முனையில் அந்த கும்பலை சுற்றி வளைத்தனர்.
போலீசார் வருவதை அறிந்ததும் 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மீதமுள்ள 4 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பொத்தேரியை சேர்ந்த சூர்யா (26), கரசங்கால் அருகேயுள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த அடிகேஸ்வரன் (28), வினோத் (29), பழையனூரை சேர்ந்த நாகராஜ் (21) என்பது தெரியவந்தது.
கைதான 4 பேரிடம் இருந்தும் நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்கள், மற்றும் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதானவர்களிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இவர்கள் பணத்துக்கு கொலை செய்யும் கூலிப்படையாக செயல்பட்டு வந்தனர்.
சென்னையை சேர்ந்த பெரிய கும்பல்கள், அந்த கூலிப்படையினருக்கு பணம் கொடுத்து கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட வைத்துள்ளனர். இவர்கள் கொலை, கொலை முயற்சி, அடிதடி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குகளும் உள்ளன.
இந்த கூலிப்படையினர் கொலை சம்பவங்களில் ஈடுபடுவதற்காக தாங்களே நாட்டு வெடிகுண்டுகளையும் தயாரித்துள்ளனர். இந்த வெடிகுண்டுகளை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களை சேமித்து வைப்பதற்கும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவும் கரசங்கால் வனப்பகுதியை பயன்படுத்தி வந்தனர். அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததால் அந்த இடம் கூலிப்படையினருக்கு வசதியாக இருந்தது. மேலும் இந்த கும்பல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள கூலிப்படையினருக்கும் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து சப்ளை செய்துள்ளனர்.
தற்போது அவர்கள் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்களை அரங்கேற்றுவதற்காக வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர்.
இந்த கும்பல் சுமார் 6 மாதமாக அந்த பகுதியில் வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் எங்கிருந்து கிடைக்கிறது என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான 4 பேர் மீது இதுவரை என்னென்ன குற்ற வழக்குகள் உள்ளன என்பது பற்றியும் போலீசார் விசாரிக்கிறார்கள்.
கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தப்பி ஓடிய 6 பேர் யார்? யார்? என்றும் அவர்களை பற்றிய விவரங்களையும் போலீசார் கேட்டறிந்தனர். அவர்களை பிடிப்பதற்காக அந்த பகுதிகளில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.