உள்ளூர் செய்திகள்

கோவையில் கொலையுண்ட ரவுடி மீது போலீஸ் திடீர் வழக்கு

Published On 2023-05-11 09:12 GMT   |   Update On 2023-05-11 09:12 GMT
  • சத்திய பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் கல்லூரி மாணவர்களை மிரட்டி பணத்தை பறித்துள்ளனர்.
  • பீளமேடு போலீசார் சத்திய பாண்டி மற்றும் அவரது கூட்டாளியில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கோவை,

கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் சத்திய பாண்டி (வயது 34). இவர் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சஞ்சய் ராஜா (36), சஞ்சய் குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சத்திய பாண்டி மற்றும் சஞ்சய் ராஜா ஆகியோர் ரவுடி கும்பல் தலைவர்களாக செயல்பட்டு வந்தனர். இந்த 2 ரவுடி கும்பல் தலைவர்களும் பல்வேறு விவகாரங்களில் எதிரெதிராக செயல்பட்டு மோதி வந்தனர்.

பீளமேடு பகுதியில் கல்லூரி மாணவர்கள் சிலரை இவர்கள் தங்களது சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனைக்கு மாணவர்களை இவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சஞ்சய் ராஜாவிற்கு ஆதரவாக இருந்த பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவரை சத்திய பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர்.

அவரை கொடிசியா பகுதியில் உள்ள ஒரு காட்டுக்குள் வைத்து மிரட்டி அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்தனர். இனிமேல் சஞ்சய் ராஜாவிற்கு ஆதரவாக இருக்கக் கூடாது என அவரை மிரட்டி எச்சரித்தனர்.

இதேபோல பீளமேட்டில் விடுதியில் தங்கி படித்து வந்த திண்டுக்கலைச் சேர்ந்த ஒரு மாணவரையும் சத்திய பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் கடத்தி சென்றதாக தெரிகிறது. இவரையும் காட்டுக்குள் வைத்து ஆயுதங்களை காட்டி மிரட்டி ரூ.43 ஆயிரம் பணத்தை பறித்துள்ளனர்.

இது குறித்து பீளமேடு போலீசார் சத்திய பாண்டி மற்றும் அவரது கூட்டாளியில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். சத்திய பாண்டி கொலை செய்யப்பட்ட பின்பு அவர் மீது போலீசார் முக்கிய குற்றவாளி என வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News