நெல்லை அருகே இலங்கை அகதி கொலையில் 2 பேருக்கு வலைவீச்சு
- ஒரு வீட்டின் மாடியில் ராமச்சந்திரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
- மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற ராமச்சந்திரனை,அசோக்குமார் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது.
நெல்லை:
நெல்லை அருகே கங்கைகொண்டானில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு இலங்கையில் இருந்து அகதியாக வந்த ராமச்சந்திரன் (வயது 52) என்பவர் வசித்து வந்தார்.
கொலை
இவர் தனியாக தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இவருடைய குடும்பத்தினர் இலங்கையில் உள்ளனர். இந்த நிலையில் முகாம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் ராமச்சந்திரன் மர்மநபர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு ராமச்சந்திரனை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
முன்விரோதம்
இந்நிலையில் முகாமில் உள்ளவர்கள் எண்ணிக்கையை சரிபார்த்தபோது, அங்கு வசித்து வந்த அசாக்குமார்(33), அவரது சகோதரர் கிருஷ்ண ராஜா ஆகியோர் அங்கிருந்து தலைமறை வாகிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு ராமச்சந்திரன் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாகவும், அதனை அசோக்குமார் தட்டிக்கேட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில நாட்களுக்கு முன்பு அசாக்குமாரின் சகோதரர் கிருஷ்ணராஜாவுக்கும், ராமச்சந்திரனுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் தற்போது அவரது கொலைக்கு பின்னர் 2 பேரும் முகாமில் இருந்து தலைமறைவாகி உள்ளனர் என்பதால் அவர்கள் இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாமா? என்ற கோணத்தில் 2 பேரையும் தேடி வருகின்றனர்.