உள்ளூர் செய்திகள்

காமராஜர் சிலைக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மரியாதை செலுத்திய காட்சி. அருகில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

ஆலங்குளத்தில் காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

Published On 2022-07-16 09:12 GMT   |   Update On 2022-07-16 09:12 GMT
  • புதிய வெண்கல சிலை அமைப்பதற்கு முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக சிவபத்மநாதன் அறிவித்தார்.
  • சுமார் 3,300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

ஆலங்குளம்:

ஆலங்குளத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் காமராஜர் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது. தி.மு.க. சார்பில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா ஏற்பாட்டின் பேரில் கோவில் திருவிழா போன்று ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலை வரை ஊர்வலமாக சென்றனர்.

காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பேசிய மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், நான்கு வழிச்சாலையால் தற்போதுள்ள காமராஜர் சிலை பாதிப்புக்குள்ளாகும் நிலையில் புதிய வெண்கல சிலை அமைப்பதற்கு முழு செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

அதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் திரளானோர் பால்குடம் எடுத்து வீதி உலா வந்தனர். பின்னர் காமராஜர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் பேரூராட்சித் துணைத் தலைவர் ஜான்ரவி தலைமையிலும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் ச.ம.க. சார்பில் நகர செயலாளர் ஜெயபாலன் தலைமையிலும், அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் முருகையா பாண்டியன் தலைமையிலும், தே.மு.தி.க. சார்பில் மாவட்டசெயலாளர் பழனிசங்கர் தலைமையிலும், நாம் தமிழர் கட்சி சார்பில் நகர செயலாளர் சொக்கலிங்கம் தலைமையிலும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஆலங்குளம் ஊர் மக்கள் சார்பாக கல்லூரி மற்றும் பள்ளி-மாணவ மாணவிகள், ஆதவரற்ற குழந்தைகள் இல்லம் உள்ளிட் இடங்களில் சுமார் 3,300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News