கொசஸ்தலை ஆற்றில் அனல்மின் நிலைய மின் கோபுரம்- 8 மீனவ கிராம மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
- வடசென்னை அனல்மின் நிலையங்களால் மீன்வளம், கடல்வளம் குறைந்து தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
- அனல்மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் மின் கோபுரம் கட்டும் பணிகள் தொடங்கப் பட வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த அத்திப் பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும் 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் வட சென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகத்திற்காக உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க கொசஸ்தலை ஆற்றின் எண்ணூர் கழிமுக பகுதியில் மண் கொட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி எண்ணூர் மீனவ மக்கள் நல சங்கத்தை சேர்ந்த 8 மீனவ கிராம மக்கள், கடந்த 10 நாட்களுக்கு முன்பு படகுகளில் கருப்பு கொடி கட்டி, மின் கோபுரம் அமைக்கும் இடத்திற்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அந்த பணிகள் நிறுத்தப்பட்டு, இரு தரப்பினரிடமும் கருத்து கேட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த பிரச்சினை குறித்து தகவல் அறிந்த பொன்னேரி தாசில்தார் செல்வகுமார், 8 மீனவ கிராமங்களை சேர்ந்த எண்ணூர் மீனவ மக்கள் நல சங்கத்தினரையும், வடசென்னை அனல் மின் நிலைய அதிகாரிகளையும் அழைத்து பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதில் நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், சிவன்படை வீதி, எண்ணூர் குப்பம், முகத்துவார குப்பம், காட்டுக்குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம் ஆகிய 8 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது வடசென்னை அனல் மின் நிலையங்களால் மீன்வளம், கடல்வளம் குறைந்து தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தற்போது 3-வது அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதால் மின் விநியோகம் செய்ய உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க கொசஸ்தலை ஆற்றின் கழிமுக பகுதியில் மண், கல் உள்ளிட்டவைகளை கொட்டி பணிகள் நடப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் மின் கோபுரம் கட்டும் பணிகள் தொடங்கப் பட வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.
இரு தரப்பு கருத்துக்களையும் விசாரித்த தாசில்தார் செல்வகுமார், இன்னும் ஓரிரு தினங்களில் தாம் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார்.