கைதி ரகசியமாக வெளியில் சென்ற விவகாரம்: சேலம் மத்திய சிறையில் டி.ஐ.ஜி. அதிரடி விசாரணை
சேலம்:
காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய காஞ்சி பகுதியை சேர்ந்தவர் வசந்த்(வயது 24).இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன . சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் சென்றார்.
அப்போது சிறை வாசலில் காஞ்சிபுரம் போலீசார் வேறு ஒரு வழக்கில் கைது செய்ய காத்து இருந்தனர் .ஆனால் சேலம் மத்திய சிறையில் இருந்து கேண்டீன் கதவை திறந்து அவர் வெளியில் அனுப்பப் பட்டதால் காஞ்சிபுரம் போலீசார் கைது செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி அவர் வேறு வழியில் செல்வதற்கு உதவியதாக சிறை வார்டன்கள் ரமேஷ்குமார், பூபதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் .மேலும் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் ஜெயில் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணம் கைமாறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் டி.ஜி.பி. உத்தரவின்பேரில் சேலம் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் இன்று சேலம் மத்திய சிறையில் விசாரணை நடத்தினார். 4 மணி நேரத்திற்கும் மேலாக அதிரடி விசாரணை நடந்தது.
கைதி வசந்த் ரகசியமாக வெளியே அனுப்பப்பட்ட தில் மேலும் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது? இதில் எவ்வளவு பணம் கைமாறியது? மேலும் அங்குள்ள கேமரா பதிவுகள் குறித்தும் கைதியை வெளியில் அழைத்துச் சென்றவர்கள் விவரம் குறித்தும் பணியில் இருந்தவர்கள் குறித்தும் விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணை முடிவில் அதிகாரிகள் சிலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் சேலம் சிறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.