320 கம்பனிகள், 20 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
- ஓமலூர் அருகே உள்ள பத்மவாணி மகளிர் கல்லூரியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
- சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் கார்மேகம் துவக்கி வைத்துள்ள இந்த முகாமில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெண்கள் பங்கேற்றுள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பத்மவாணி மகளிர் கல்லூரியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் சுமார் 320-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர்.
குறிப்பாக தங்க நகை விற்பனை மற்றும் உற்பத்தி, அடகு நிறுவனங்கள், சிமெண்ட், ரப்பர், செப்பல், கார், மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனங்கள், சிறு ஹோட்டல்கள் முதல் ஹோட்டல் நிறுவனங்கள், விமான உதிரிபாக உற்பத்தி நிறுவனம், மருத்துவமனைகள், ஆசிரியர் என பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் கார்மேகம் துவக்கி வைத்துள்ள இந்த முகாமில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெண்கள் பங்கேற்றுள்ளனர்.
ஒவ்வொருவரும் தாங்கள் படித்த படிப்புக்கேற்ற வேலை வழங்கும் நிறுவனங்களை அணுகி வேலையை பெற்று வருகின்றனர். மேலும், இந்த முகாமில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டம், முதுநிலை பட்டம், பொறியியல், செவிலியர், கேட்டரிங், உணவு தயாரிப்பு வரையிலான வேலைக்கு, அவர்களின் படிப்புக்கு ஏற்ற வேலை வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், தருமபுரி ஆகிய அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பெண்களும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு வருபவர்களை, முக்கிய நகரங்களில் இருந்து இலவசமாக அழைத்து வருவதற்கு பள்ளி கல்லூரி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து முகாமில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் பணி ஆணைகளை வழங்கினார்.
சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓமலூர் அருகே மெகா வேலைவாய்ப்பு முகாமில் தனியார் 320 கம்பனிகளில் வேலை வாய்ப்பை பெறுவதற்கு 20 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு கம்பெனியும் தங்களுக்கு தேவையான ஆட்களை நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுத்து வருகின்றனர். இந்த முகாமில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு பயிற்சி இயக்குனர் வீரராகவராவ், மாவட்ட கலெக்டர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம், மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தொழிலக பாதுகாப்பு துறை இயக்குனர் ஜெகதீசன், மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா, வேலைவாய்ப்பு மண்டல இயக்குனர் லதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.