நானோ யூரியா தெளிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்
- ஒரு ஏக்கருக்கு ஒருமுறை மேலுரம் இடுவதற்கு அரை மூட்டை யூரியா.
- மகசூலும் ஏக்கருக்கு 300 கிலோ முதல், 500 கிலோ வரை கூடுதலாக கிடைக்கிறது.
மெலட்டூர்:
அம்மாபேட்டை வட்டாரம், சூழியக்கோட்டை கிராமத்தில் வேளாண்மை துறை மற்றும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனம் சார்பில் டிரோன் மூலமாக நானோ யூரியா தெளிப்பு செயல்முறை விளக்கம் மற்றும் வயல்வெளி தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அம்மாபேட்டை உதவி வேளாண் இயக்குனர் மோகன், இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவன விற்பனை துணை மேலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் வயல்வெளி செயல்முறை விளக்கம் தந்து இப்கோ நிறுவன அதிகாரி சுரேஷ், டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து கூறியதாவது,
விவசாயிகள் உரசெலவை குறைக்கும் வகையில் 500 மில்லி நானோ யூரியா, ஒரு மூட்டை யூரியாவுக்கு சமமானது ஆகும். வழக்கமாக ஒரு ஏக்கருக்கு ஒருமுறை மேலுரம் இடுவதற்கு அரை மூட்டை யூரியா, அரை மூட்டை பொட்டாஷ் பயன்படுத்தப்படுகிறது.
இதன் செலவு ரூ.1000 வரை செலவாகிறது. அதற்கு பதிலாக அரை லிட்டர் நானா யூரியா மற்றும் அரை லிட்டர் சாகரியா இரண்டையும் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிப்பதன் மூலம் உர செலவு பாதியாக குறைகிறது.
மேலும் நானா யூரியா இலை வழியாக உறிஞ்சப்பட்டு பயிரிநுல் ஊடூருவி செல்கிறது.
இதன் மூலம் மண் வளம் காக்கப்படுவதோடு, மகசூலும் ஏக்கருக்கு 300 கிலோமுதல், 500 கிலோ வரை கூடுதலாக கிடைக்கிறது. நானோ யூரியா பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு உர செலவு பாதியாக குறையும் என்றார்.
இதில் முன்னோடி விவசாயிகள், உழவர்கள், விவசாய தொழிலாளர்கள், வேளாண் களப்பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.