குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை- கலெக்டர் தகவல்
- போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரியை சோந்த மாணவர்ளுக்கு சான்றிதழ்.
- மொத்தம் ரூ.92 ஆயிரத்திற்கான காசோலையை மாணவர்களுக்கு வழங்கினார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 359 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழா, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரியினை சோந்த 22 மாணவ-மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் சிறப்பு பரிசாக ரூ.2 ஆயிரத்திற்கான காசோலையாக மொத்தம் ரூ.92 ஆயிரத்திற்கான காசோலையினை 22 மாணவ-மாணவியர்களுக்கு வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.