உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம் நடந்தது.

நிலக்கரி சுரங்கம் ரத்து அறிவிப்பை அதிகார பூர்வமாக அறிவிக்காவிட்டால் போராட்டம்

Published On 2023-04-10 09:08 GMT   |   Update On 2023-04-10 09:08 GMT
  • 7 மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
  • டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை.

தஞ்சாவூர்:

காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.

தஞ்சை மாவட்ட தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.

மாநில பொதுச் செயலாளர்கள் சாமி. நடராஜன் , மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன், சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை மதிவாணன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் சங்கர், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில நிர்வாகிகள் முஹம்மது அலி, சுப்பிரமணியன், பன்னீர்செல்வம், மாதவன், துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் வீர. மோகன் நன்றி கூறினார்.

கூட்டத்தின் முடிவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூரில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்பட 7 மாவட்டங்களில் இருந்து விவசாய சங்க நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டிலே குறிப்பாக காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் அறிவிப்பை வெளியிட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன.

உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினார்.

மேலும் பிரதமருக்கு கடிதம் எழுதினார். முதலமைச்சரின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

நேற்றைய தினம் டெல்டாவிலிருந்து நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை திரும்பப் பெறுவதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டது.

அதாவது வாக்குறுதி மட்டுமே கொடுத்துள்ளார்கள். ரத்து செய்வோம் என்கிற அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

இதனை முழுமையாக நம்ப முடியாது. ஏனென்றால் டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கொடுத்துள்ள எழுத்துப்பூர்வ மான வாக்குறுதிகளை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.

அதுபோல் நிலக்கரி சுரங்கம் ரத்து என்கிற வாக்குறுதி ஆகி விடுமோ என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது. இதனால் மத்திய பா.ஜ.க.வின் வாக்குறுதிகளை நம்ப மாட்டோம்.

எனவே இந்த மாத இறுதிக்குள் நிலக்கரி சுரங்கம் அமைப்பது ரத்து என்ற அறிவிப்பை அதிகாரபூர்வமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் மே மாதம் முதல் வாரத்தில் மீண்டும் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தி மத்திய அரசுக்கு எதிரான வலுவான போராட்டங்களை முன்னெடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News