உள்ளூர் செய்திகள் (District)

ரெயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-08-21 07:56 GMT   |   Update On 2022-08-21 07:56 GMT
  • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல இயலாமல் சிரமமடைகின்றனர்.
  • மாற்றுவழி சாலை இல்லாத காரணத்தினால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகிறார்கள்.

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள சன்னாநல்லூரில், நன்னிலம் ரெயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. ரெயில் நிலையத்திற்கு அருகில், கும்பகோணம் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. நெடுஞ்சாலையில் ரெயில்வே கேட் அமையப் பெற்றுள்ளது.

காலை, மாலை நேரங்களில், ரெயில் போக்குவரத்திற்காக, ரெயில்வே கேட் மூடப்படும் போது, சாலை மார்க்க பயணிகள், பெரிதும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.

கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினத்திற்கு செல்லக்கூடிய பயணிகள், உரிய நேரத்திற்கு அலுவலகம் மற்றும் வங்கிகளுக்கு செல்ல இயலாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், உரிய நேரத்திற்கு செல்ல இயலாமல் சிரமம் அடைகின்றனர்.

மேலும் ரெயில் வருகைக்காக, சில நேரங்களில் நீண்ட நேரம், ரெயில்வே கேட் மூடப்படுவதால், அவசரப் பயணம் மேற்கொள்ளக் கூடிய பயணிகள், பெரிதும் அவதிக்கு உள்ளாகிறார்கள். சாலைக்கு மாற்று வழி சாலை இல்லாத காரணத்தினால் பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.

கும்பகோணம் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலை என்பது இரு பெரும் நகரங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய பயணிகள், பயணிக்கும் சாலையாக இருப்பதனால் இச்சாலையில் சன்னாநல்லூர் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டுமென நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் நிலையில், இச்சாலையில் வாகனப் போக்குவரத்தில் பெருக்கம் அதிகமாக உள்ள காரணத்தினாலும், காலை மாலை நேரங்களில், ரெயில் போக்குவரத்திற்காக கேட் மூடும் போது பெரும் வாகன நெருக்கடி ஏற்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

எனவே சன்னாநல்லூர் ரெயில்வே கேட் அருகில், ரயில்வே பாதையை எளிதில் கடக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News