கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
- பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 252 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
- 3 பேருக்கு முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,மார்ச்.7-
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை. சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 252 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து ஊத்தங்கரையை சேர்ந்த குரோஷா என்பவர் செங்கல்பட்டு அருகே நடந்த சாலை விபத்தில் உயிர் இழந்ததையடுத்து அவருடைய கணவர் பாதுஷாவிற்கு ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 668-ம், அவருடைய வாரிசுதாரர்களளான அபுபக்கர் சித்திக், அகியா ஆகிய 2 பேருக்கு தலா ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 666 என மொத்தம் 3 பேருக்கு முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.