வீட்டுமனை பட்டா கோரி அன்னூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
- ஊராட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று அன்னூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர்.
- நிலத்தை வீட்டு மனையாக பிரித்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
அன்னூர்,
அன்னூர் அருகே அக்கரைசெங்கப்பள்ளி, வடக்கலூர் ஊராட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று அன்னூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர்.
அவர்கள் அங்கு தாசில்தார் தங்கராஜை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
விவசாய தொழிலாளர்களான எங்களுக்கு சொந்தமான இடம் மற்றும் வீடு இல்லாததால் ஒரே வீட்டில் மூன்று குடும்பங்கள் வசித்து வருகிறோம்.
அரசு ஒன்றை சென்ட் இடம் வழங்கினால் அதில் வீடு கட்ட முடிவதில்லை. எனவே அனைத்து குடும்பங்களும் தலா 5 சென்ட் நிலம் வழங்க வேண்டும்.
மேலும் இப்பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தரிசு நிலம் உள்ளது. அந்த நிலத்தை வீட்டு மனையாக பிரித்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சாய் ராஜிடமும மனு அளித்தனர்.
இதுகுறித்து நமது நிலம் நமதே அமைப்பின் தலைவர் குமார வேல் பேசுகையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த நிலமும், வீடும் இல்லாமல் தவிக்கின்றனர் அவர்களுக்கு தலா 5 சென்ட் இடம் பெற்றுத் தருவதற்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்த இருக்கிறோம். என்றார்.