அரசு பஸ்சை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
- குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
- சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்னூர்,
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த நாரணா புரம் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையம்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை திடீரென, அரசு பஸ்சை முற்றுகையிட்டு சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த அரசு பஸ் உக்கடம், ெரயில் நிலையம், காந்திபுரம், சரவணம்பட்டி வழியாக வடுகபாளையத்தை கடந்து வாகாரப்பாளையம் வரை செல்வது வழக்கம். கடந்த ஒரு வாரமாக குறித்த நேரம் காலை நேரத்தில் வராமல் உள்ளது.
இதனால் காலையில் பயணிக்கும் பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனை கண்டித்து ஊர் பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இன்ஸ்பெக்டர் விஜயா, சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த், செல்வராஜ் மற்றும் அன்னூர் போலீசார் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு சென்று நடைபெற இருந்த போராட்டத்தை கைவிடுமாறு பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி முன்பு போல பஸ்களை இயக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததன் பேரில், சமாதானமடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.