டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
- போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
வடவள்ளி,
கோவை பூலுவபட்டி அருகே உள்ள சித்தரசாவடி பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு டாஸ்மாக் கடை அமைக்க அரசு முடிவு செய்தபோது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பெண் விவசாய தொழிலாளர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் இந்த வழியாக தான் செல்லகின்றனர். மேலும் அந்த பகுதி வளைவான பகுதி என்பதால் அங்கு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாலும், டாஸ்மாக் கடை அமைக்க அனுமதிக்க கூடாது என அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கோவை கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் இன்று திடீரென டாஸ்மாக் கடை முன்பு சென்ற பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து அங்கு வந்த ஆலாந்துறை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.