ஆலங்குடியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டதை வரவேற்று இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- ஆலங்குடியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டதை வரவேற்று இனிப்பு வழங்கி கொண்டாடினர்
- மேலும் பட்டாசு வெடித்து சாலையில் சென்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரின் பிரதான பகுதியான அரசமரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி சமூக ஆர்வலர்களும், பா.ஜ.க., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்து மூடப்படும் கடைகளின் பட்டியலையும் வெளியிட்டது. இந்த பட்டியலில் ஆலங்குடி பழைய கோர்ட் பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையும் அகற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆலங்குடி அரசமரம் பகுதியில் உள்ள மூடப்பட்ட டாஸ்மாக் கடையின் முன்னதாக திரண்ட பா.ஜ.க. மற்றும் சமூக ஆர்வலர்கள் மூடியிருந்த டாஸ்மாக் கடையின் கதவிற்கு மாலை அணிவித்து, கடை மூடப்பட்டதாக வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு நோட்டீஸிற்கு மாலை அணிவித்ததனர். மேலும் பட்டாசு வெடித்து சாலையில் சென்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.