- பாண்டிக்குடி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது
- ஊராட்சி மன்ற தலைவர் ஒரு தலைபட்சமாகவும் செயல்படுவதாக குற்றம் சாட்டி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் பாண்டிக்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா ஆண்டியப்பன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதி குறைநிறைகளை முன்வைத்தனர்.அதற்கு அதிகாரிகள் முறையான தீர்வு மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். இந்நிலையில் 2-வது வார்டு ஊராட்சிமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி, 4 ஆண்டுகள் கடந்தும் தனது வார்டில் எந்த ஒரு மக்கள் பணியும் நடைபெறவில்லை என்றும் இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டால் முறையான பதில் இல்லையென்று குற்றம் சாட்டினார்.மேலும் ஊாட்சி மன்ற தலைவர் ஒரு தலைபட்சமாகவும், ஊராட்சி உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம் சாட்டி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிற ஜனவரி 26-ந்தேதிக்குள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து ராஜினாமா கடிதம் வாபஸ் பெறப்பட்டது.கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர் திடீர் ராஜினாமா முடிவால் கூட்டம் பரபரப்பாக கானப்பட்டது.