அறுவடைக்கு தயாரான 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
- அறுவடைக்கு தயாரான 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது
- பயிர்களை கையில் ஏந்தி கண்ணீர்வடிக்கும் விவசாயிகள்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய தாலுக்காக்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர்.
கடந்த ஆண்டுகளை போல் அல்லாமல் இந்தாண்டு உரிய நேரத்தில் பருவமழை தொடங்கி அவ்வப்போது சிறு சிறு மழையாக பெய்தது. இதன் மூலம் கிடைத்த நீரை விவசாயிகள் நீர் நிலைகளில் சேமித்து வைத்து விவசாயம் செய்தனர். மேலும் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ள இடங்களில் வாகனங்களில் தண்ணீர் கொண்டு வந்து விவசாயிகள் விவசாயம் செய்திருந்தனர்.
அவ்வாறு காப்பாற்றப்பட்டு வந்த நெற்பயிர்கள் நல்ல முறையில் விளைந்து அறுவடைக்கு தயாரானது. இன்னும் இரண்டொரு நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நேற்று பெய்த தொடர் மழையால் நெற்கதிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளது. இதனை பார்த்த விவசாயிகள் மூழ்கிய பயிர்களை கையில் எடுத்து கண்ணீருடன் பார்த்து வேதனையடைந்தனர்.
இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில் விவசாயிகள் நாங்கள் ஆண்டு தோறும் அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம், நகைகளை வைத்தும், விவசாயக் கடன்கள் வாங்கியும் ஏக்கர் ஒன்றிற்கு 40 ஆயிரம் வரை செலவு செய்து விவசாயம் செய்தோம். இந்தாண்டு போதிய மழை இல்லாவிட்டாலும் கிடைத்த தண்ணீரை கொண்டும், வெளியிலிருந்து வாங்கியும் விவசாயம் செய்திருந்தோம். முழு விளைச்சல் இல்லாவிட்டாலும் விளைந்த நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது பெய்து வருகிற தொடர் மழையால் நெற்கதிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமாகிவிட்டது. எனவே விவசாயிகளின் துயர நிலையை அரசு அறிந்து பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீட்டுத் தொகை கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.