கண்மாய் வாரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
- கண்மாய் வாரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது
- ஆவுடையார்கோவில் தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவில் கோதைமங்களம் கிராமம் உள்ளது.புதுக்கோட்டை மாவட்ட எல்லையிலும், சிவகங்கை மாவட்ட எல்லை ஓரத்திலும் அமைந்துள்ள இக்கிராமத்தில் சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோதைமங்களம் கண்மாயின் வரத்து வாரி பகுதியில் சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் கண்ணேரியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் வாரியை அடைத்து விவசாயப் பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கோதைமங்களம் கண்மாய்க்கு வர வேண்டிய வரத்து நீர் தடுக்கப்பட்டு, விவசாயம் பொய்க்கும் நிலை உருவாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய தண்ணீர் இன்றி விவசாயம் செய்ய முடியாமல் கடும் வறட்சியை சந்தித்த மக்கள் நிலை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கை இல்லையென கூறப்படுகிறது. எனவே ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதனை தொடர்ந்து வட்டாட்சியர் மார்டின்லூதர்கிங்கை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் எதிர் வருகின்ற வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.