உள்ளூர் செய்திகள் (District)

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்

Published On 2023-10-06 07:16 GMT   |   Update On 2023-10-06 07:16 GMT
  • இரவு 8 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார்.
  • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேராட்டம் 15-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது.

திருவொற்றியூர்:

மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி மிகவும் பிரசித்தி பெற்றது, இங்கு ஆண்டு தோறும் 10 நாள் புரட்டாசி திருவிழா வெகு விமரிசையாக நடை பெறும். இந்த விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது

இதையொட்டி அய்யாவின் பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திரு நாமக்கொடியை கையில் ஏந்தியவாறு பள்ளியறையை 5 முறையும்,கொடி மரத்தை 5 முறையும் அய்யா அரஹர சிவ என்ற நாமத்தை உச்சரித்தபடி சுற்றி வந்தனர்.

பின்னர் பதிவலம் வந்து காலை 6.30 மணியளவில் திருநாமக்கொடி ஏற்றப்பட்டது.

இரவு 8 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார். விழா நாட்களில் தினமும் மாலை திருஏடு வாசிப்பு நடை பெறுகிறது.

தினமும் இரவு அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனம், கருடவாகனம், மயில் வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், சர்ப்ப வாகனம், மலர்முக சிம்மாசன வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், குதிரை வாகனம், இந்திரவாகனம், பூம்பல்லக்கு வாகனங்களில் அய்யா பதிவலம் வருகிறார்.

விழாவின் 8-வது நாளான 13-ந்தேதி இரவு 8.30 மணிக்கு சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணி விடை, 9மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேராட்டம் 15-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது. அன்று காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 6.30 மணிக்கு திருத்தேர் அலங்காரம், 10.30 மணிக்கு பணிவிடை நடக்கிறது. இதையடுத்து காலை 11.30 மணிக்கு அய்யா திருத்தேரில் வீதி உலா வருகிறார்.

தேரோட்டத்தை தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார். இதில் தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயத்துரை, ஞானதிரவியம் எம்.பி., நெல்லை -தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் தலைவர் டி.பத்மநாபன்.

திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செல்வராஜ்குமார், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் செயலாளர் கொட்டிவாக்கம் ஏ.முருகன், பிரைட் சி.முருகன், சி. அருணாசலம் உள்ளிட்ட முக்கிய பரிமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.

பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், இரவு10.30 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடை பெறுகிறது. பின்னர் இரவு 1.30 மணிக்கு அகண்டநாமம், 1.45 வைகுண்ட சோபனம், அண்டநாமம், திரு நாமக்கொடி இறக்குதல், பள்ளி யுணர்த்தல், திருநாள் சேவை மகத்துவகானம், இனிமம் வழங்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை அய்யா வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை தலைவர் பி. துரைப்பழம், பொது செயலாளர் ஏ. சுவாமி நாதன், பொரு ளாளர். பி. ஜெயக் கொடி, கூடுதல் செயலாளர் டி. ஐவென்ஸ், துணை செயலாளர் வி. சுந்தரேசன், இணை பொது செயலாளர் கே. ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

விழா நாட்களில் பக்தர்கள் சென்று வர போக்குவரத்து வசதி மற்றும் பொது சுகாதாரம் நவீன கழிப்பறைகள் உணவு வசதி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News