உள்ளூர் செய்திகள்

திருக்கார்த்திகை திருநாளையொட்டி அகல் விளக்குகள் வாங்க பெண்கள் ஆர்வம்

Published On 2022-12-06 09:39 GMT   |   Update On 2022-12-06 09:39 GMT
  • ஆலங்குடி பகுதியில் திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு அகல் விளக்குகள் வாங்குவதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டினர்
  • கடைவீதிகள் மற்றும் காய்கறி மார்க்கெட் வீதியில் விற்பனையாகும் அகல் விளக்குகளையும் அவற்றை பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர்

புதுக்கோட்டை:

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் அனைவரும் விளக்கேற்றி வழிபாடு நடத்துவது வழக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வாங்குவதிலும், பாரம்பரிய முறைப்படி அதில் எண்ணை ஊற்றி, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றுவது அதிகரித்துள்ளது

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கடைவீதிகளில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு அகல் விளக்கு வியாபாரம் சூடு பிடித்தது. இந்த ஆண்டு தொடர்ந்து மழை பெய்து வருவதால் அகல் விளக்கு தயாரிப்பதில் சற்று தொய்வு ஏற்பட்ட போதிலும் அதிக அளவில் அகல் விளக்குகள் வாங்குவதில் மக்கள் காட்டும் ஆர்வம் விற்பனையையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

தொடர் மழையால் மிகக்குறைந்த அளவே அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்திருந்தது. கடந்த வருடங்களில் ரூ.10-க்கு 15 விளக்குகள் வரை வழங்கப்பட்டன. ஆனால் இவ்வாண்டு ஐந்து அல்லது ஆறு விளக்குகள் வழங்கப்படுகிறது.

அகல் விளக்குகளில் மெழுகு விளக்குகளும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும் மரபுப்படி களி மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளில் தீபம் ஏற்ற மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் களிமண் அகல் விளக்குகளை வாங்குவது இத்தொழில் ஈடுபட்டிருக்கும் ஏழை தொழிலாளர்களின் வாழ்வில் விளக்கு ஏற்றுவதற்கு ஒப்பாகும் என்பதால் அதன் விற்பனை அதிகரித்துள்ளது.

இன்று தீபத்திருநாளை முன்னிட்டு நேற்று மழையூர், துவார், வாடிமனைபட்டி, மாங்குடி ஆகிய ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்டு ஆலங்குடி கடைவீதிகள் மற்றும் காய்கறி மார்க்கெட் வீதியில் விற்பனையாகும் அகல் விளக்குகளையும் அவற்றை பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர்.

Tags:    

Similar News