கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
- வான்வழி மிதந்து வரும் மேகக் கூட்டங்களைக் குளிரவைத்து மழையாய் பொழியச் செய்வது மரம், செடி கொடிகள் தாம்.
- திறந்தவெளிக் கிணறுகள் இல்லாத வீடுகளில் மொட்டை மாடியில் இருந்து கொண்டுவரப்படும் மழைநீரை சிறு கால்வாய் மூலம் வடிகட்டும் தொட்டிக்குள் பாய்ச்ச வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட நேரு யுவகேந்திரா தலைவர் அப்துல் காதர் வரவேற்புரை ஆற்றினார். அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் தனபால் கூறுகையில், மரம், செடி, கொடிகள் மழை பெய்வதற்கு முக்கிய காரணிகளாகும்.
வான்வழி மிதந்து வரும் மேகக் கூட்டங்களைக் குளிரவைத்து மழையாய் பொழியச் செய்வது மரம், செடி கொடிகள் தாம்.
மக்கள் தொகை பெருக்கத்தால் அவை இருந்த இடங்கள் மக்கள் வாழும் இடங்களாக மாறி வருகின்றன. அதனால் மழை குறைந்து வருகிறது.
மழைநீரை பல்வேறு வழிகளில் சேகரிக்கலாம்.மொட்டை மாடியில் விழும் மழைநீரை குழாய்கள் மூலம் தரைப்பகுதிக்கு கொண்டு வந்து கிணற்றுக்கும், வீட்டு சுவருக்கும் இடையில் தொட்டி அமைத்துச் சேகரிக்க வேண்டும். அங்கு வடிகட்டிய பின்னர் திறந்தவெளி கிணற்றுக்குள் மழை நீரை விழச்செய்து சேகரிக்கலாம்.
திறந்தவெளிக் கிணறுகள் இல்லாத வீடுகளில் மொட்டை மாடியில் இருந்து கொண்டுவரப்படும் மழைநீரை சிறு கால்வாய் மூலம் வடிகட்டும் தொட்டிக்குள் பாய்ச்ச வேண்டும். அங்கிருந்து சிறு தொட்டிக்குள் மழைநீரைச் செலுத்தி சேகரிக்கலாம்.
மழைநீரைச் சேமிப்போம். வாழ்விற்கு வளம் சேர்ப்போம். விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி என்பதை உணர்ந்து செயல்படுவோம் என்று பேசினார்.
விழாவில் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர் வேடியப்பன், நேரு யுவகேந்திரா இளைஞர் நல தலைவர் பிரேம் பாரத்குமார் மற்றும் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவர் வேல்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்கள்.
கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெகன் வாழ்த்துரை கூறினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களான ஸ்டீபன், விக்டர், ஆண்டனி, சரவணகுமார் ஆகியோர் மற்றும் கிருஷ்ணகிரி நேரு யுவகேந்திரா, ஏபிஜே அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம் ஆகியோர் இணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில் முடிவில் பாலாஜி நன்றி கூறினார்.