மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
- திருவாரூர் நகராட்சியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முற்றிலுமாக நிறைவு செய்ய வேண்டும்.
- வார்டுகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்றத் தலைவர் புவனப் பிரியா செந்தில் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பருவமழை தொடங்க இருப்பதால், அனைத்து வார்டுகளிலும் பாரபட்சம் இன்றி மழை நீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
திருவாரூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் உள்ள மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முற்றிலுமாக நிறைவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மேலும் நகராட்சி முழுவதும் உள்ள வார்டுகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். பழுதடைந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்களை அமைத்து தர வேண்டும்.
இவைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகர் மன்ற உறுப்பினர்கள் பேசினர்.
நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகியும் உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கப்படவில்லை. நகர்மன்ற உறுப்பினர் என்பதற்கு எந்த அடையாளமும் இல்லாமல் இருக்கிறது.
உடன் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அனைவரின் புகைப்படங்களும் சேகரித்து ஒரு வார காலத்திற்குள் அடையாள அட்டை வழங்கு வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் நகராட்சி மேலாளர் முத்துக்குமார், நகர மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், சங்கர், செந்தில், ரஜினி சின்னா, அசோகன் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.