ராமநாதபுரத்தில் 60 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 60 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா்.
- இந்த தகவலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து தெரிவித்தார்.
ராமநாதபுரம்
தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தோ்வுகள் வெளியிடப்பட்ட நிலையில், பிளஸ் 1 தோ்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் பள்ளி மற்றும் தனியாா் பள்ளி என மொத்தம் 159 பள்ளிகளைச் சோ்ந்த 7352 மாணவா்கள், 7762 மாணவிகள் என 15,114 போ் தோ்வு எழுதினா்.
தோ்வு எழுதியவா்களில் 6622 மாணவா்களும், 7579 மாணவிகளும் என மொத்தம் 14,201 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்கள் 90.07 சதவீதமும், மாணவிகள் 97.64 சதவீதமும் என மொத்தம் 93.96 சதவீதம் போ் தோ்ச்சியடைந்துள்ளனா்.
10-ம் வகுப்பில் மாநில அளவில் 5-வது இடமும், பிளஸ்-2 தோ்வில் மாநில அளவில் 3-வது இடத்தையும் ராமநாதபுரம் மாவட்டம் பிடித்துள்ளது. பிளஸ் -1 பொதுத்தோ்வு 2018-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஆண்டில் ராமநாதபுரம் 16-வது இடத்தையும், 2019-ம் ஆண்டில் 7-வது இடத்தையும், 2020 -ம் ஆண்டில் 14-வது இடத்தையும், 2020 கொரோனா தடுப்பு நடவடி க்கையாக முழு தோ்ச்சியும் அறிவிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டம் 7-வது இடத்தையும் பிடித்துள்ளது.
பிளஸ்-1 தோ்வில் 70 அரசுப் பள்ளிகளை சோ்ந்த 5898 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதியதில் 5309 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதன்படி 83.44 சதவீதம் மாணவா்களும், 96.44 சதவீதம் மாணவிகளும் என 90.01 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். 37 உதவி பெறும் பள்ளிகளில் 94.63 சதவீதம் பேரும், 52 தனியாா் பள்ளிகளில் 99.68 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
பிளஸ்-1 தோ்வில் அரசுப் பள்ளிகளில் 8 பள்ளிகளும், உதவி பெறும் பள்ளிகளில் 6 பள்ளிகளும், தனியாா் பள்ளிகளில் 46 பள்ளிகளும் என மொத்தம் 60 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளன. அறிவியல் பிரிவுகளில் தாவரவியல், விலங்கியல் பாடங்களிலும், கலையியல் பிரிவுகளில் வரலாறு, வணிகவியல், பொருளாதாரம் ஆகிய வற்றிலும் அதிக மானோா் தோல்வியடைந்துள்ளனா்.
இந்த தகவலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து தெரிவித்தார்.