உள்ளூர் செய்திகள்

70 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளது-கலெக்டர்

Published On 2023-02-16 09:18 GMT   |   Update On 2023-02-16 09:18 GMT
  • 70 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.
  • அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், மாலங்குடி கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், பார்வையிட்டு ஆய்வு செய்தார்

அப்போது அவர் தெரிவிக்கையில்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க 70 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்க திட்டமிடப்பட்டது. இதில் முதற்கட்டமாக அனைத்து ஊராட்சி ஒன்றியங்களையும் உள்ளடக்கி 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட துவங்கி உள்ளது. தொடர்ந்து திட்டமிட்டபடி மேலும் 20 அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தப்படும். இதன் நோக்கம் இடைத் தரர்களை தடுத்து நேரடியாக அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்து அதிக லாபம் பெற வேண்டும் என்பதே ஆகும்.

அந்த வகையில் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் அந்தந்த பகுதி விவசாயிகள் பதிவு செய்து தங்களது நெல் மூட்டைகளை எடுத்துச் சென்று விற்பனை செய்திடும் வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி நெல் மூட்டைகளை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு அவரவர் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். ஒவ்வொரு நாளும் 125 டன்னுக்கு மேல் நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து பெற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நடப்பாண்டிற்கு விவசாயிகளிடமிருந்து 50,000 மெட்ரிக் டன் நெல் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். வியாபாரிகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பயன்படுத்தி உரிய விலைக்கு விற்பனை செய்து சரியான லாபத்தை பெற்று பயனடைய வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ஜோதி பாசு, தரக்கட்டுப்பாட்டு அலுவலர் பன்னீர் செல்வம், துணை மண்டல மேலாளர் மேகவர்ணம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News