சகோதரத்துவத்தை வெளிப்படுத்திய சமத்துவ பொங்கல்
- கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்திய சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
- பால் பொங்குகின்ற நேரத்தில் மாணவிகள் மகிழ்ச்சியுடன் குலவையிட்டு பொங்கலை வரவேற்றனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அனைத்து சமுதாய மக்களின் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், கீழக்கரை ரோட்டரி சங்கம், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் கிளை மற்றும் கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவ னங்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
கல்வி நிறுவனங்களின் தலைவர் வழக்கறிஞர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் தலைமை தாங்கினார்.
மாணவ-மாணவி களுக்கு பொங்கல் குறித்த ஓவியம் வரைதல், பானை அலங்காரம், "விவசாயம் காப்போம்" என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
இந்த போட்டியில் பல்வேறு பள்ளிகளில் சேர்ந்த 590 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி வளாகத்தில் கரும்புகள், தோரணங்கள் கட்டப்பட்டு பொங்கல் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. பால் பொங்குகின்ற நேரத்தில் மாணவிகள் மகிழ்ச்சியுடன் குலவையிட்டு பொங்கலை வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து பெற்றோர்களுக்கான வினாடி வினா போட்டி, ஆசிரியர் ஆசிரியைக ளுக்கான பல்வேறு போட்டி கள் நடந்தது.
மாலை யில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் பெருவிழா மற்றும் பரிசளிப்பு விழா பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இபுராகிம் தலைமையில் நடந்தது.
ராமநாதபுரம் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சமூக ஆர்வலர் சலிமுல்லா ஹ்கான், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் சேர்மன் சுந்தரம், ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் கபீர் வரவேற்றார்.
கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் உசேன், சொக்க நாதர் கோவில் குருக்கள் வன்மீகநாதன், கீழக்கரை தென்னிந்திய திருச்சபை ஆயர் விஜயகுமார், புனித அந்தோணியர் ஆலயம் பங்குத்தந்தை ரெமிஜியஸ், கீழக்கரை துணை வட்டாட்சியர் பழனிக்குமார், இயற்கை ஆர்வலர் மன்மோகன் சிங் ஆகியோர் பேசினர்.
பள்ளியின் தாளாளர் எம், எம்.கே.முகைதீன் இப்ராஹிம் தீப்பந்தம் சுழற்றி பார்வையாளர்களின் பாராட்டுதலை பெற்றார்.
விழாவில் கீழக்கரை நகர்மன்றத் தலைவர் செகானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்தான், 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முகம்மது காசிம், முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் எபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் செய்தனர்.