வீட்டு பத்திரங்களை கொடுக்காமல் கந்து வட்டி கேட்டு மிரட்டியவர் கைது
- கடன் வாங்கியவர்கள் பணத்தை செலுத்திய பிறகும் வீட்டு பத்திரங்களை கொடுக்காமல் கந்து வட்டி கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
- ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை கைது செய்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரிய மாயாகுளத்தை சேர்ந்தவர் கலீல் ரகுமான். இவர் ராமநாதபுரத்தில் மிளகாய் கமிசன் கடை வைத்திருந்த போது வட்டிக்கு பணம் கொடுக்கும் அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
கலீல் ரகுமான் மகளின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால் கங்காதரனிடம் சென்று பணம் கேட்டார். 100 ரூபாய்க்கு 1 ரூபாய் வட்டி வீதம் ரூ.4 லட்சம் பெற்று மாதம் தவறாமல் வட்டி செலுத்தி வந்துள்ளார்.
உறவினர்களுக்கு பணம் தேவைபட்டால் வாங்கி கொடுங்கள் என்று கூறியதால் கலீல் ரகுமான் உறவினர்கள் மற்றும் ஊரில் உள்ள 19 பேருக்கு மொத்தம் ரூ.46 லட்சம் கடனாக பெற்றுகொடுத்தார். அந்த பணத்திற்கு பதிலாக 19 பேரின் வீட்டு பத்திரங்களை வாங்கி கொடுத்தார்.
பின்னர் கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டதால் பணம் வாங்கிய சிலர் வட்டி செலுத்த முடியாமல் போனதால் ரூ.100-க்கு 3 ரூபாய், 100 ரூபாய்க்கு 10 ரூபாய், 100 ரூபாய்க்கு 13 ரூபாய் வட்டி வீதமும் மற்றும் அபராத தொகையும் சேர்த்து ரூ.1 ½ கோடி கட்டினர்.
பெரும்பாலானோர் அசல் தொகையை செலுத்தி விட்டதால் அசல் தொகை அனைத்தையும் வட்டி தொகையில் வரவு வைத்து தற்போது ரூ.50 லட்சம் தர வேண்டும் என்று கங்காதரன் மிரட்டியுள்ளார். பணம் பெற்றவர்கள் அசல் தொகை செலுத்தியதால் வீட்டு பத்திரத்தை திருப்பி கேட்டும் கொடுக்கவில்லை.
ரூ.46 லட்சம் அசல் தொகைக்கு ரூ. 1 ½ கோடி செலுத்தியும் கங்காதரன் பத்திரத்தை கொடுக்காமல் அடியாட்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து மிரட்டி உள்ளார். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரையிடம் கலீல் ரகுமான் மனைவி உம்முல் ஹபீபா புகார் செய்தார்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை கைது செய்தனர்.