அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்க வேண்டும்
- முதுகுளத்தூர் யூனியனில் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்க வேண்டும்.
- தலைவர் வலியுறுத்தினார்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் யூனியனில் 46 ஊராட்சிகளுக்கும் குடிநீர் வழங்குவதற்கான நீராதாரம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. பரமக்குடிசார் ஆட்சியர் அப்தாப் ரசூல் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம், யூனியன் தலைவர் சண்முகபிரியா ராஜேஷ் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) வரவேற்றார். இதில் யூனியன் தலைவர் சண்முக பிரியா ராஜேஷ் பேசுகையில், புழுதிக்குளம் எனது கவுன்சிலுக்கு உட்பட்டது. இந்த பகுதிக்கு பாம்பூர் ஜம்ப்பில் இருந்து காவிரி குடிநீர் வர வேண்டும். ஆனால் அது பரமக்குடி தாலுகா ஆகும். அங்கிருந்து குடிநீர் விடுவதில்லை. இப்படித்தான் முதுகுளத்தூர் யூனியன் முழுதும் ஜம்ப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் கூட வழங்க முடியாவிட்டால் மக்கள் பிரதிநிதிகளை மக்கள் எப்படி மதிப்பார்கள்?. காவிரி குடிநீர் விரிவாக்கத்தில் அனைத்து கிராமத்திற்கும் குடிநீர் தொட்டிகளை அமைத்து கிராமங்களுக்கு தேவையான குடிநீரை வழங்க வேண்டும் என்றார்.
பயிற்சி கலெக்டர் நாராயண சர்மா, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி, ஊராட்சி மன்ற தலைவர்கள் விளங்குளத்தூர் கனகவள்ளிமுத்துவேல், செல்வநாயகபுரம் பால்சாமி, காக்கூர்ஜெயமணிராஜா, குமாரகுறிச்சி செந்தில்குமார், மைக்கேல் பட்டணம் குழந்தை தெரேஸ் சிங்கராயர், யூனியன் மேலாளர் சிவகாமி உள்பட பலர் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.