அறிவிக்கப்படாத மின் தடையால் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்
- அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.
- தடையில்லா மின் வினியோகம் செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தினமும் இரவு, பகல் பாராமல் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருவதால் அனைத்து தரப்பு மக்களும் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
இதனால் வியாபாரிகள், கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்த மின்தடையால், மேலும் அவதிக்குள்ளாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு மீண்டும் மின்சாரம் வந்தாலும் குறைந்த மின் அழுத்தமாக உள்ளது. இது குறித்து பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தாலும் கண்டு கொள்வது கிடையாது. எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் இரவு நேத்தில் மின் தடை ஏற்படுத்தி வருவது மக்களுக்கு பெரும் வேதனையை அளித்தள்ளது.
இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்தடை யால் கைக்குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரும் கொசுக்கடியிலும், புழுக்கம் காரணமாகவும் தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த தொடர் மின்தடை ஏற்பட காரணம் தெரியாமல் பொதுமக்கள் புலம்பி தவித்து வருகின்றனர். மின் தடைக்கு பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். எனவே மின்சார வாரியம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தடையில்லா மின் வினியோகம் செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.