நெல் சாகுபடி செய்த விவசாயிகள் நவம்பர் 15-ந்தேதி வரை காப்பீடு செய்யலாம்
- நெல் சாகுபடி செய்த விவசாயிகள் நவம்பர் 15-ந் தேதி வரை காப்பீடு செய்யலாம்.
- மேலும் விவரங்களுக்கு வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகள் அணுகலாம்.
ராமநாதபுரம்
வறட்சி, வெள்ளம், தொடர் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் மகசூல் இழப்பு ஏற்படுவதை விவசாயிகளுக்கு ஈடு செய்யும் வகையில் பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் 2016-ம் ஆண்டு முதல் செயல் படுத்தப்படுகிறது.
இந்நிலையில் 2023-24ம் ஆண்டுக்கான பயிர் இன்சூரன்ஸ் செய்வதற்கான அறிவிப்பை கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டார்.
அதில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் பிரிமியமாக ஏக்கருக்கு ரூ.361.50 செலுத்த வேண்டும். விவசாயம் பாதிக்கப்பட்டால் இழப் பீடாக ஏக்கருக்கு ரூ.24,100 வழங்கப்படும். நவம்பவர் 15-ந் தேதி வரை விவ சாயிகள் பதிவு மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. நெற்பயிர் போன்று சோளம், உளுந்து ஆகிய பயிர்களுக்கும் நவம்பவர் 15-ந் தேதி வரை இன்சூரன்ஸ் செய்யலாம்.
கம்பு, சோளம் ஆகிய பயிர்களுக்கு நவம்பர் 30-ந் தேதி வரையும், நிலக்கடலை, சூரியகாந்திக்கு டிசம்பர் 30-ந் தேதி வரையும், பருத்திக்கு 2024 ஜனவரி 31-ந் தேதி வரையும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் முன் மொழிவு படிவம், பதிவு படிவம், ஆதார் அட்டை நகல், வி.ஏ.ஓ., வழங்கும் சாகுபடி அடங்கல், வங்கி சேமிப்பு புத்தகம் ஆகிய வற்றுடன் பதிவு மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகள் அணுகலாம், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.