உணவு பொருள் உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு நிதி உதவி
- உணவு பொருள் உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு நிதி உதவி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறு சிறு நிறுவனங்களுக்கான திட்டம் 2020-2021 ம் ஆண்டு முதல் 2024-2025ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவ னங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல் தொழில் நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
மேலும் தனி நபர், உணவு பதப்படுத்தும் தொழிலில் புதிதாக ஈடுபடும் குறு, சிறு தொழில் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பொருள் உற்பத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட விருப்பம் உள்ள நபர்கள் குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் பெற்று பயனடைய வழிவகை உள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர், https://pmfme.mofpi.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.
மேலும் விபரங்கள் அறிய பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியை அணுகவும். தகுதியுடைய பயனாளிகள் இத்திட்டத்தில் பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.