கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிக்கும் பணி தீவிரம்
- ஏர்வாடி பகுதிகளில் கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
- கடந்த ஜூன் மாதம் முதல் கட்ட கொசு மருந்து தெளிப்பு பணி நடந்தது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாரத்தில் உள்ள ஏர்வாடி, வாலிநோக்கம், முந்தல், மாரியூர், ஒப்பிலான் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்க பரமக்குடி சுகாதாரத்துறை சார்பில் வருடத்திற்கு 2 முறை வீடு, வீடாக சென்று கொசு மருந்து தெளிப்பான்கள் மூலம் தெளிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் கட்ட கொசு மருந்து தெளிப்பு பணி நடந்தது. இந்த நிலையில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுறுத்தலின் படி, சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரவீந்திரன் ஆகியோர் உத்தரவுப்படி நேற்று சின்ன ஏர்வாடி பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியை மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ் தொடங்கி வைத்தார். 30 நாட்கள் நடைபெறும் இந்த பணியில் 30 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இவர்களோடு இணைந்து டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களும் வீடு, வீடாக சென்று தண்ணீரில் வளரும் கொசுப்புழுக்களை அபேட் மருந்துகள் ஊற்றி அழித்து வருகின்றனர்.
இந்த பணிகளை பரமக்குடி சுகாதாரத்துறை இளநிலை பூச்சியியல் வல்லுநர் பாலசுப்பிரமணியன், கடலாடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன் ஆய்வு செய்தனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் செல்லத்துரை, ராஜசேகரன், சுப்பிரமணியன், ராம்பிரபு, முரளிதரன், தீனதயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.