மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மருத்துவமனைகளுக்கு பாராட்டு
- மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மருத்துவமனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- பயனாளிகளுக்கு, கலெக்டர் நினைவு பரிசு வழங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் 5-ம் ஆண்டு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.
இந்த விழாவில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் உயர்சிகிச்சை பெற்று பயனடைந்த 5 பயனாளிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து இத்திட்டத்தில் சிறப்பாக சிகிச்சை வழங்கிய ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பரமக்குடி அரசு தலைமை மருத்துவ மனை உள்ளிட்ட மருத்துவ மனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் 5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையும், 5 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்திற்கான அட்டையும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 11 காப்பீட்டு திட்ட அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவி களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகே சன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) சகாய ஸ்டீபன் ராஜ், மருத்துவ கண்காணிப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திலீப்குமார், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட மேலாளர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.